Thursday, October 8, 2009

தமிழருக்கு கிடைத்தது நோபல் பரிசு : வேதியியலில் புதிய கண்டுபிடிப்பு


ஸ்டாக்ஹோம் : நூறு கோடி இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த, சிதம்பரத்தில் பிறந்து தற்போது, அமெரிக்காவில் வாழும் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு, இந்த ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு தரப்படுகிறது.

தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோர், இந்த ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம், சிதம்பரத்தில் கடந்த 1952ம் ஆண்டு பிறந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர், கடந்த 1971ம் ஆண்டு, பரோடா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கடந்த 1976ம் ஆண்டு, ஓகியோ பல்கலைக் கழகத்தில், இயற்பியல் துறையில், பிஎச்.டி., பட்டம் பெற்றார். இவர், இயற்பியல் வல்லுனராக தன் வாழ்க்கையை துவக்கினார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், உயிரியல் துறைக்கு மாறினார் ராமகிருஷ்ணன். அங்கு அவர், வகுப்புகள் நடத்தியதோடு, அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மவுரிசியோ மாண்டல் என்பவருடன் இணைந்து, ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.

ராமகிருஷ்ணன், கடந்த 1995ம் ஆண்டு, உட்டா பல்கலைக்கழகத்தில், உயிர் வேதியியல் துறை பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர், ஆர்.என்.ஏ.,( ரிபோ நியூக்ளிக் அமிலம் )வில் உள்ள புரோட்டீன்கள் குறித்து ஆய்வு செய்தார். "இ-கோலி' யில் மிகச்சிறிய மூலக்கூறான "ரிபோசோமால்' சப்யூனிட் குறித்த சிறப்பான ஆய்வு தான் இப்பரிசு பெறக் காரணமாக அமைந்தது. கடந்தாண்டு அவர், பிரிட்டன், கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள எம்.ஆர்.சி., மாலிக்குலார் பயாலஜி ஆய்வகத்தில், சேர்ந்தார். அங்கு அவர் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவருக்கு, இந்தாண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இவருடன், இதே ஆய்வு மேற்கொண்ட தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோரும், இந்த நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரிபோசோமில் உள்ள ஆயிரக்கணக்கான அணுக்களை கண்டறிய, இம்மூன்று விஞ்ஞானிகளும், எக்ஸ்-ரே, கிரிஸ்டலோகிராபி முறையை பயன்படுத்தி உள்ளனர். வாழ்க்கைக்கு மிக முக்கியமான ரிபோசோம் குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், புதிய வகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்க வழிவகுக்கும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், டைனமைட் தொழிலதிபராக இருந்த, ஆல்பிரட் நோபல் எழுதிய உயிலின் படி, அறிவியல் மற்றும் அமைதிக்காக, கடந்த 1901ம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின், கடந்த 1969ம் ஆண்டு முதல், சுவீடன் மத்திய வங்கி, பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கத் துவங்கியது.
பள்ளியில் இருந்து விஞ்ஞான ஆர்வம்: விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தந்தையும், தாயும் விஞ்ஞானிகள், இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது, "விவசாயி மகன் எப்படி விவசாயியாக இருப்பாரோ அது போல, எனக்கு விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்வம் காரணமாக, விஞ்ஞானத்தில் ஈர்க்கப்பட்டேன். பெற்றோர், டாக்டர் ஆக விரும்பினர். ஆனால் இயற்பியல், அதற்குப் பின் வேதியியல் ஆய்வில் ஈர்க்கப்பட்டேன்' என்று கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி. ராமனுக்கு அடுத்தபடியாக விஞ்ஞான ஆய்வில் நோபல் பரிசு பெற்று சாதனை படைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். சிதம்பரத்தைச் சேர்ந்த இவர், குஜராத்தில் உள்ள பரோடா பல்கலையில் இயற்பியல் படித்ததற்கு பின் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக சென்று தற்போது, புகழேணியில் உயர்ந்து நிற்கிறார்.
வாழ்த்துகள்!!!

-நன்றி தினமலர்

No comments:

Post a Comment