Friday, October 2, 2009

படித்ததில் பிடித்தது

முன்னுரை :
உங்களில் பலருக்கு "டெலிமார்க்கெட்டிங்" எனப்படும் நம் அனுமதியில்லாமலேயெ தொலைபேசி வாயிலாக தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் மார்க்கெட்டிங் ரம்பங்களுடன் பேசிய (அறுபட்ட) அனுபவங்கள் வாய்த்திருக்கும்!
இப்பேர்ப்பட்டவர்களிடமிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தப்புவது எப்படி?

இதோ சில ஐடியாக்கள் :

1. டெலிமார்க்கெட்டர் பேசி முடித்தவுடன் "ஒன்ஸ்மோர் பிளீஸ்" என பாந்தமாக, பவ்யமாகக் கேளுங்கள். நடுநடுவே "ஓ.. லவ்லி.. ஆஹா.. ஓ..அப்படியா.. ஃபேண்டாஸ்டிக்" எனப் போட்டுத்தாக்கிவிட்டு கடைசியில், மீண்டும் ஆரம்பியுங்கள், "ஒன்ஸ்மோர் பிளீஸ்."

2. பேசத் தொடங்கியவுடனேயே நீங்கள் வேலையாக இருப்பதாகவும், போன் நம்பர் கொடுத்தால் பிறகு தானே பேசுவதாகவும் கூறுங்கள். ஆனால் பேசாதீர்கள்.

3. பேசிக்கொண்டிருக்கும்போது நடு நடுவே ஹலோ.. ஹலோ.. என அலறுங்கள். சிக்னல் கிடைக்காததால் விட்டுவிட்டுக் கேட்பதாகக் கூறுங்கள். முடிந்தால் சத்தமாக, வெகு சத்தமாகப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் உச்சஸ்தாயில் பேசிக்கொண்டிருக்கும்போதே லைனைக் கட் செய்யுங்கள்.

4. விஷயத்தைக் கேட்டுவிட்டு, தற்போது சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவும் சாப்பிட்டு முடிக்கும்வரை லைனிலேயே காத்திருக்கும்படியும் வேண்டுங்கள். எப்போது போன் செய்தாலும் சற்றுக் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்.

5. போனை எடுத்து விபரம் கேட்டுவிட்டு, அந்த மொபைலை தன் நண்பர் மறந்துபோய் டேபிளில் வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, உங்களுக்குப் பிடிக்காத நபர் யாருடைய போன் நம்பராவது, முக்கியமாக டென்ஷன் பார்ட்டியாக இருந்தால் நல்லது. அவருடைய எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லுங்கள்.

6. எந்தப்பொருள் வாங்குவதாக இருந்தாலும் தனது மேனேஜர்தான் முடிவு செய்யவேண்டும், அதனால் அவரிடம் பேசுங்கள் எனக் கூறிவிட்டு, மொபைலில் பேசத் துடித்துக்கொண்டிருக்கும் உங்கள் நான்கரை வயது மகனிடம் கொடுங்கள்.

7. அவர்களுடைய பொருள் மிக அருமையாக இருப்பதால் அதைப் பற்றிய விளக்கத்தை ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாக சொல்லச் சொல்லவும். ஏனென்றால் அதை பேப்பரில் எழுதுவதுபோல் பாவ்லா காட்டப்போகிறீர்கள்.

8. அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது, "நல்லா இருக்கீங்களா?" எனக் கேட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். ஆரம்பத்திலேயே பிடித்துவிடுங்கள், "அதை ஏன் சார் கேட்குறீங்க…. எங்க தாத்தா காலத்திலேர்ந்து…. " (1947ல் ஆரம்பித்து எதில் முடிக்கவேண்டுமென்பது உங்கள் விருப்பம்)

9. பேச ஆரம்பித்தவுடன் "ராங் நம்பர் சார்" எனக் கூறி விட்டு வைத்துவிடுங்கள்.

10. பேச ஆரம்பித்தவுடனேயே மலையாளம், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளை மிக்ஸர் அடித்து ஒரு மொழியை உருவாக்கிப் பேசுங்கள்.

11. ஆச்சரியத்துடன் பேச ஆரம்பியுங்கள், "ஜோசப் நீயாடா பேசறே.. உங்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு." எதிர்முனை சொல்லும், தான் ஜோசப் இல்லை என்று. நீங்கள் விடாதீர்கள், "ச்சும்மா ஜோக் அடிக்காதடா… எனக்குக் காது குத்தியாச்சு..." எதிர்முனை எதிர்பாலினத்தவராக இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடும்.

12. HSBC பேங்கிலிருந்து தொடர்பு கொண்டால் உங்கள் ஆபிஸ் எண்ணைக் கொடுத்து அந்த எண்ணுக்குப் பேசச் சொல்லுங்கள். அந்த எண் ICICI பேங்கின் மேலாளர் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நாம் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

13. அவர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள். உங்கள் பீட்டர் இங்க்லீஷையும் 'டவுட் கேட்கிறேன் பேர்வழி!' என அவிழ்த்து விடுங்கள். இண்டர்வியூ செல்லும்முன் ஆங்கிலத்தில் பயமில்லாமல் பேசி பிராக்டிஸ் செய்வதற்கு இதை விட தோதான ஆட்கள் கிடைப்பார்களா என்ன?!

முடிவுரை :

இதையெல்லாம் பரீட்சித்துப் பார்க்குமுன் நல்ல பிள்ளையாக தெளிவாக, தன்மையாக, பொறுமையாக எடுத்துக்கூறுங்கள், இது போன்ற அழைப்புகள் தயவு செய்து வேண்டாமென்று. அவர்கள் பாவம் இல்லையா! அதைமீறி அவர்கள் கேட்கவில்லையென்றால் அவர்கள் காதில் இரத்தத்தைப் வரவைத்துவிட வேண்டியதுதான். ஹ்ம்ம்…வேறுவழி?






1 comment:

Abdul Rahman said...

ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி!!!

Post a Comment