சென்னை : தமிழகத்தில் இதோ, அதோ என்று போக்கு காட்டிய வடகிழக்கு பருவமழை, காலதாமதமாக துவங்கியுள்ளது. நீண்ட நாட்களாக கடும் வெயில் காய்ந்து வந்த நிலையில், திடீரென நேற்றைய வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. சென்னை நகரில் நேற்று பல பகுதிகளில், "சில்'லென மழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
பொதுவாக அக்டோபர் மாதம் பருவமழை துவங்கிவிடும். வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி துவங்கும் என, டில்லி வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், குறித்த தேதி கடந்த பிறகும் மழை பெய்வதற்கான அறிகுறி தென்படவில்லை. தொடர்ந்து கடும் வெப்பநிலையே நிலவியது. கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டனர். கோடை காலம் கடந்தும், 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தது. இந்நிலையில், நேற்றைய வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. காய்ந்து கிடந்த சென்னை நகரில், நேற்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னை மட்டுமில்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, நுங்கம்பாக்கத்தில் 13 மி.மீ., மற்றும் மீனம்பாக்கம் 3 மி.மீ., மழை பெய்தது. இவ்வளவு நாளாக போக்குகாட்டிய பருவமழை, மிகவும் காலதாமதமாக துவங்கியுள்ளது. இதை, வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் உறுதி செய்தனர்.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி குழந்தைவேலு கூறியதாவது: பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி துவங்கும். 1984, 1988, 1992, 2000 ஆகிய ஆண்டுகளில் நவம்பரில் பெய்தது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வடகிழக்குப் பருவமழை துவங்கும் அறிகுறி இன்றி காணப்பட்டது. தற்போது, பருவமழை துவங்கி விட்டது என்பதன் அடையாளமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. வங்காள விரிகுடாவில், வலு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மட்டுமின்றி வடமாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். வங்காள விரிகுடாவில் இந்த காற்றழுத்தம் மேற்கொண்டு வலுவடைந்தால், பலத்த மழையை எதிர்பார்க்கலாம். பருவமழை தாமதமாக துவங்கினாலும், இந்தாண்டு வழக்கமான மழை அளவு இருக்கும். இவ்வாறு குழந்தைவேலு கூறினார்
-நன்றி தினமலர்
Wednesday, October 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment