Friday, December 18, 2009
பருவநிலை மாற்றத்தால் 40 ஆண்டுகளில் 100 கோடி பேர் இடம்பெயரும் அபாயம்
"பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள், தென் கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்வர்' என, குடியேற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சர்வதேச குடியேற்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி: பருவநிலை மாற்றத்தால், வரும் 2050ம் ஆண்டு, இரண்டரை கோடி முதல் 100 கோடி மக்கள் வரை இடம் பெயர்வர். சுற்றுச்சூழல் மாசு மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நெருக்கடி காரணமாக, ஆப்கானிஸ்தான், வங்க தேசம், மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கே எதிர்காலத்தில் பெரும்பாலான மக்கள், இடம்பெயர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், கடந்தாண்டு திடீரென ஏற்பட்ட பேரழிவுகளால், இரண்டு கோடி மக்கள் வீடிழந்துள்ளனர். இவ்வாறு பருவநிலை மாற்றத்தால் அகதிகளாக மாறியோர், பலர் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வளமான பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலோர், ஏற்கனவே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்கு சென்றுள்ளதால், அங்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, பெரும்பாலான நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப் பால் ஏற்படும் இடம் பெயர்தலை தங்கள் நாட்டுக் குள்ளேயே சமாளித்துக் கொள் கின்றன. ஆனால், சிறிய தீவுகள், கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் போது சர்வதேச அளவில் இடம் பெயரும் நிலை உண்டாகிறது. மேலும், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள் வரை இடம்பெயர்வர் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளின் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கையும் இரட்டிப் பாகி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் பருவநிலை மாற்றங்களால், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளவிலான வெப்பநிலை 2 டிகிரி சென்டிகிரேடு முதல் 5 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரிக்கலாம். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது
Source-Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment