Friday, December 4, 2009

வீறு கொண்டு எழுந்த "விரு"


மும்பை : மும்பை டெஸ்டில் எரிமலையாய் வெடித்தார் சேவக். அதிரடியாக ஆடிய இவர் அதிவேகமாக 250 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இன்றைய ஆட்டத்தில் 3 சதம் எடுத்து உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 293 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். இதனால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சேவக்கும் ஏமாற்றத்தை தந்தது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி "டிரா' ஆனது. கான்பூரில் நடந்த 2வது டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. தில்ஷன் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 8 விக் கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்திருந்தது.
சதம் நழுவல்: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய மாத்யூசுக்கு சதம் அடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. ஸ்ரீசாந்த் வீசிய பந்தை அடித்த இவர், 2வது ரன்னுக்காக வீணாக ஓடினார். அதற்குள் பந்தை பெற்ற சச்சின், மிக துல்லியமாக "த்ரோ' செய்ய தோனி "ஸ்ட்ம்ப்சை' தகர்த்தார். மாத்யூஸ் 99 ரன்களுக்கு பரிதாபமாக ரன் அவுட்டனார். ஓஜா சுழலில் வலகேதரா(8) வெளியேற, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முரளி விஜய் நம்பிக்கை: பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவக், தமிழக வீரர் முரளி விஜய் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். இலங்கை பந்துவீச்சை மிகச் சாதாரணமாக சமாளித்த இவர்கள் பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தனர். முரளிதரன் சுழலில் ஒரு இமாலய சிக்சர் அடித்த முரளி விஜய், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், 87 (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களுக்கு அவுட்டானார். சேவக், விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்து அசத்தியது.

சேவக் மிரட்டல்: துவக்கம் முதலே அதிரடி காட்டிய சேவக், 101 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் 17 வது சதம் கடந்தார். இலங்கை பவுலர் குலசேகரா வீசிய ஆட் டத்தின் 57 வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசிய இவர், 168 பந்துகளில் இரட்டை சதம் பதிவு செய்தார். இவருடன் இணைந்த ராகுல் டிராவிட் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெஸ்ட் அரங்கில் 58 வது அரை சதம் கடந்தார் டிராவிட். இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 79 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்திருந்தது. சேவக் (284), டிராவிட் (62) அவுட்டாகாமல் இருந்தனர். தற்போது இந்திய அணி 50 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் சேவக்கின் அதிரடி தொடரும் பட்சத்தில், இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
சாதனை மன்னன்: மும்பை டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தார் இந்திய வீரர் சேவக்.
* நேற்று 45 ரன்களை எட்டிய போது, டெஸ்ட் அரங்கில் மிக விரைவாக 6000 ரன்களை குவித்த 3 வது இந்தியர் என்ற பெருமை பெற்றார் சேவக். இதுவரை 123 இன்னிங்சில் விளையாடியுள்ள இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். இதற்கு முன் சச்சின் (120 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (117 இன்னிங்ஸ்) ஆகியோர் இப்பெருமை பெற்றுள்ளனர்.
* இந்தியா தரப்பில் டெஸ்டில் 6 ஆயிரம் ரன்களை எட்டும் 8 வது வீரரானார் சேவக். இதற்கு முன் சச்சின் (12917ரன்) டிராவிட் (11244 ரன்), கவாஸ்கர் (10122 ரன்), கங்குலி (7212 ரன்), வெங்சர்க்கார் (6868 ரன்), லட்சுமண் (6855 ரன்) அசாருதின் (6215 ரன்), குண்டப்பா விஸ்வநாத் (6080 ரன்) ஆகியோர் இந்த இலக்கை கடந்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் இந்தியா சார்பில் அதிக முறை இரட்டை சதம் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இதுவரை இவர் 6 முறை இந்த இலக்கை எட்டியுள்ளார். இப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் டிராவிட் (5 முறை) உள்ளார். சச்சின், கவாஸ்கர் இருவரும் தலா 4 முறை இரட்டை சதம் விளாசியுள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை 300 ரன்களை கடந்துள்ள சேவக், 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இவர் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக அதிகபட்சமாக 319 ரன்கள் (2008, சென்னை) எடுத்துள்ளார். அடுத்து பாகிஸ்தான் (309, முல்தான், 2004), இலங்கை (284*, மும்பை, 2009), பாகிஸ்தான் (254, லாகூர், 2006), இலங்கை (201, காலே, 2008), பாகிஸ்தான் (201, பெங்களூரு, 2005) அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார்.

* நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 284 ரன்கள் குவித்துள்ள சேவக், டெஸ்ட் அரங்கில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (309 ரன்), இங்கிலாந்தின் ஹம்மண்ட் (295 ரன்) ஆகியோர் முறையே இவ்வரிசையில் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ளனர்.

* 207 பந்துகளில் 250 ரன்களை நேற்று குவித்தார் சேவக். இதன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் சேவக், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், வெஸ்ட் இண்டீசின் லாரா ஆகியோர் தலா 2 முறை 300 ரன்கள் என்ற இலக்கை எட்டியுள்ளார். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் தற்போது 284 ரன்கள் எடுத்துள்ள சேவக், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 300 ரன்கள் எடுத்து இப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேவக் 293 ரன்கள் எடுத்த நிலையில், முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனால் 3 சதம் அடித்த வீரர் என்ற சாதனை கைநழுவிப்போனது.

தமிழக வீரர் முரளி விஜய் : மும்பை டெஸ்டில் சேவக் 400 ரன்கள் அடித்து சாதனை படைப்பார் சேவக் என தமிழக வீரர் முரளி விஜய் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,"" மும்பை டெஸ்டில் முதல் சதம் அடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. சேவக்கின் ஆட்டம் பிரம்மிக்க வைத்தது. இலங்கை பந்து வீச்சை மிகவும் எளிதாக சமாளித் தார். முரளிதரன் சிறப்பாக பந்து வீசிய போதும், ரன் குவிப்பில் சேவக்கின் ஆதிக்கம் தொடர்ந்தது. சேவக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பந்தை தெளிவாக கவனித்துஆடுமாறு எனக்கு அறிவுறுத்தினார். அவரது ஆட்டத்தை விவரிக்க வார்த்தை இல்லை. '' என்றார்

Source :Dinamalar

No comments:

Post a Comment