Monday, December 28, 2009

குறைந்து வரும் விவசாய நிலங்கள்

அரிசி இறக்குமதி செய்ய,​​ நீண்டகா​ லத்​திற்​குப் பின்​னர் மத்​திய அரசு சமீ​பத்​தில் அனு​மதி வழங்​கி​யுள்ளது.​ இந்தியாவின் உயிர்நாடித் ​ தொழில் விவசாயம்.​ அதிலும்,​​ அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் ​ விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் ​(2009,​ ஜூலை 24-ம் தேதி)​ மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி,​​ இந்தியாவின் ​ அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது.​ அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் ​ பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம்,​​ பிகார்,​​ மேற்கு வங்கம்,​​ சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் ​ பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.​ ​

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது.​ மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.​ ஆனால்,​​ இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.​ தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.​ ஆம்,​​ காவிரிப் படுகைப் ​ பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன.​ இதனால்,​​ வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் ​ மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.​ ​ ​

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி,​​ மருத்துவமனை,​​ தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் ​ உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.​ இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த ​ வேண்டும்.

2005-06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.​ இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் ​ நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.​ ​(நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும்,​​ தஞ்சை ​ மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.)​ நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி ​ பெற்று வருகிற நிலையில்,​​ தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்,​​ காஞ்சிபுரம்,​​ திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.​ ​

செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும்,​​ இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் ​ இருக்கிறது.​ சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம்,​​ கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது.​ ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது.​ 1974-ல் ​ தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன.​ ஆனால்,​​ தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம்.​ இதனால் ஆற்றுப் படுகைகளில் ​ நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன.​ இதனால்,​​ தண்ணீர் இல்லாத நிலையில் -​ வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் -​ விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.​ இதனால் ​ விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.

தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும்.​ ஆனால்,​​ 2005}06-ல் 61,16,145 ​ டன்கள் தான்.​ இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால்,​​ விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும்,​​ தொழிற்சாலைகளாகவும்,​​ சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய ​ காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள்,​​ விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட,​​ வர்த்தக வங்கிகள் ​ தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.​

இந்நிலை மாறி ​ விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த ​ விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் ​ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய,​​ மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.​ கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த ​ குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.​ அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் ​ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.​ ​

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.
Source-Dinamani

1 comment:

Thanikachalamurthi said...

Hi Abdul

This is the truth of the Agriculture development in India..we'll need to rely on other countries for food in One day, but we will be exporting Softwares on that day. Finally, The society which exports Computers will be able to buy/import the food ...

Post a Comment