தனித் தமிழ் ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி, கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இன்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். ஓட்டெடுப்பின் முடிவுக்கேற்ப, இலங்கையில் அமைதி நிலவுமா, போர் தொடருமா என்பது தெரியவரும்.
இலங்கையில் நடந்த நான்காவது கட்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. சாதாரண ஆயுதக் குழுவாக துவங்கி, முறையான ராணுவமாக வளர்ந்த விடுதலைப் புலிகளின் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலத்துக்கு, தனி ஈழம் பற்றி சிந்தித்துக் கூட பார்க்க முடியாது என்பதே இலங்கைத் தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள், மவுனமாகத் தான் இருந்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளனர். ஆனால், வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடும், எண்ண ஓட்டமும் வேறாக உள்ளது. போர்க் காலத்தில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த அவர்களில் பெரும்பாலோர், இன்று தங்கள் உழைப்பால் முன்னேறி நல்ல நிலையில் உள்ளனர். வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை, போராட்டக் குழுக்களுக்கு நிதியுதவியாகவும் வழங்கி வந்தனர்.
புலிகளின் நடமாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்ட பிறகு, தமிழ் ஈழம் என்பது, வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடம் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி உள்ளது. "தனி ஈழம் தான் நமது இறுதி லட்சியம்' என ஒரு சாராரும், "அதெல்லாம் இனி பகல் கனவு' என, இன்னொரு சாராருமாக, உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள் இரண்டுபட்டுக் கிடக்கின்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கனடாவில் வசிக்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், இலங்கைத் தமிழர்களின் உண்மையான உள்ளக் கிடக்கையை அறிந்து கொள்ளும் விதமாகவும், இன்று கனடா முழுவதும் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை, 12 மணி நேரம் நடக்க உள்ள இந்தத் தேர்தலுக்காக, 31 இடங்களில் 52 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, கனடா வாழ் தமிழர்களுக்கான தேர்தல் கூட்டமைப்பு செய்துள்ளது.
இதன் செய்தித் தொடர்பாளர் சிவ விமலச்சந்திரன் கூறுகையில், ""இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை, இலங்கைத் தமிழர்கள் தவற விடக் கூடாது. காழ்ப்புணர்ச்சிகளையும், மனமாச்சரியங்களையும் ஓரங்கட்டிவிட்டு செயல்பட வேண்டிய நேரமிது,'' என்றார். "ஓட்டுப்பதிவு செய்பவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களது பெயர் பதிவு தேவையில்லை; இலங்கைத் தமிழர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஏதாவது ஓர் ஆவணத்தைக் காட்டினால் போதும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்தலில், தனித் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைத்தால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் அடுத்த திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Source-Dinamalar
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வேண்டாம் என்று வாக்கு அளிக்க எவனாவது இருக்கானா ???
Post a Comment