வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் 26ம் தேதி துவங்கியது. வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை கொட்டியது. தமிழகத்தில் பருவ மழை நான்கு கட்டங்களாக பெய்தது. ஐந்தாவது கட்டமாக, கடந்த 9ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனாலும், வளி மண்டலத்தின் மேல்பகுதியில் வீசும் காற்று சாதகமாக இல்லாததால், மழை பெய்யவில்லை என்று வானிலை மையம் அறிவித்தது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் சில நாட்களாக காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பகல் முழுவதும் வெயில் அடித்தது. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாகவும், ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடலில் சில நாட்களாக நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருவாகியுள்ளது. அது தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், கடலில் 55 முதல் 65 கி.மீ., வேகத்திற்கு பலத்தக் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. சென்னை, கடலூர், நாகையில் 1ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி, எண்ணூர், புதுச்சேரியில் 4ம் நம்பர் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: சில நாட்களுக்கு முன், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி இலங்கை மட்டக்களப்பிலிருந்து 150 கி.மீ., தூரத்திற்கும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 800 கி.மீ., தூரத்திற்கும் இடையே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனத்த மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும், இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு ரமணன் கூறினார்.
சென்னையை நோக்கி "வார்டு' புயல்: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது உருவான நிஷா புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி துவங்கியது. இதனால், நான்கு கட்டமாக மழை பெய்தது. தற்போது புதிதாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது புயலாக மாறி சென்னையில் இருந்து தென்கிழக்கே 850 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு "வார்டு' என பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மையம் கொண்டுள்ள புயல் சின்னம் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியை நோக்கி நகரும் என தெரிகிறது. குறிப்பாக சென்னையை தாக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் துறைமுகத்தில் எச்சரிக்கை கொடியேற்றம்: கடலூர் துறைமுகத்தில் தூர முன்னறிவிப்பு (புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றோடு கூடிய மழையுள்ள வானிலை பகுதி ஏற்பட்டுள்ளதற்கான எச்சரிக்கை) ஒன்றாம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப் பட்டுள்ளது. மேலும் தாழங்குடா, தேவனாம்பட்டினம், முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
Source-Dinamalar
Saturday, December 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment