Tuesday, November 17, 2009

சச்சினை தாக்கரே விமர்சித்த விவகாரம்: நாடு முழுவதும் எதிர்ப்பு


மும்பை : "மும்பை அனைவருக்கும் சொந்தமானது' என, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறியதை கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா தலைவர் பால் தாக்கரே கருத்துக்கு, நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் உட்பட பலர், தாக்கரேக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சச்சினை பாராட்டியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரராகத் திகழ்பவர் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கிரிக்கெட்டில் இவர் செய்துள்ள சில சாதனைகளை, அத்தனை எளிதில் யாராலும் முறியடித்து விட முடியாது. கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் சச்சின். அப்போது அவர், "நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவன்; அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால், முதலில் நான் ஒரு இந்தியன். மும்பை நகரம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது' என்றார். சச்சின் கூறிய இந்த கருத்து, சிவசேனா தலைவர் பால் தாக்கரேக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா கட்சி பத்திரிகையான "சாம்னா'வில், பால் தாக்கரே தலையங்கம் எழுதியுள்ளார். இதில், "மும்பை அனைவருக்கும் சொந்தமானது' என, சச்சின் கூறியதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தலையங்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது: இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம், அவர் மேலும் ஒரு சிங்கிள் (ஒரு ரன்) எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் தற்போது ஏற்படவில்லை. மும்பையை பெறுவதற்காக மராத்தியர்கள் கடும் போராட் டம் நடத்தினர். இதற்காக, 105 மராத்தியர்கள், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அப்போதெல்லாம், சச்சின் பிறந்திருக்கவே மாட்டார். இது போன்ற கருத்துகளை தெரிவித்திருப்பதன் மூலம், மராத்திய மக்களின் இதயத்தில் இருந்து அவர் ரன் அவுட் ஆகிவிட்டார். அவரின் இந்த கருத் துக்கள், மராத்திய மக்களின் மனதை புண்படுத்தி விட்டன. கிரிக்கெட் களத்தில் இருந்து விலகி, அரசியல் களத்திற்கு செல்வதற்கு அவர் முயற்சிக்கிறார். அதற்காகவே, அவர் இது போன்ற தகவல்களை தெரிவித்துள்ளார். சச்சின், கிரிக்கெட்டில் மட்டும் கவனத்தைச் செலுத்தினால் போதுமானது. இவ்வாறு அதில் எழுதியிருந்தார்.

கண்டனம்: நாட்டுப் பற்றுடன் சச்சின் கூறியிருந்ததை, பால் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும், பால் தாக்கரேக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியதாவது: மாஸ்டர் பேட்ஸ் மேன் சச்சின், தன் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த வார்த்தைகளைத் தான் தெரிவித்துள்ளார். ஒரு விளையாட்டு வீரருக்கான உணர்வுடன் அவர், இதைத் தெரிவித்துள்ளார். அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவுக்காகவே விளையாடுகிறார். எனவே, நான் முதலில் இந்தியன் என, அவர் கூறியதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். சச்சினின் இந்த கருத்து, நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும். சிவசேனாவின் கருத்துக்களை மக்கள் ஒதுக்கி தள்ளி விடுவர். அவர்களின் அரசியல் நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர். இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடி பெருமை சேர்த்துள்ளார். சச்சினைப் பற்றி சிலர் கூறிய சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு நான், எந்த முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. இவ்வாறு அசோக் சவான் கூறினார்.

இந்திய கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ராஜிவ் சுக்லா கூறியதாவது: சச்சினுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள விஷயங்கள் முற்றிலும் தேவையற்றவை. சச்சின் ஒரு தேசியவாதி. மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் இந்தியர். அவரை இந்தியர் எனக் கூறுவது குற்றமா? முகமது அலி ஜின்னா எந்த வகையில் பேசினாரோ, அதே பாணியில் தான் தற்போது தாக்கரே பேசியுள்ளார். இந்த விஷயத்தில் எந்த ஒரு மராத்தியரும், சிவசேனாவுக்கு ஆதரவாக இருக்க மாட்டர். ஓட்டுகளைப் பெறுவதற்காக இதுபோல் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

பா.ஜ.,வின் ராஜ்ய சபாத் தலைவர் அருண்ஜெட்லி கூறுகையில், " சச்சின் பேசியது முழுவதும் சரி, அவரால் இந்தியாவுக்கு கவுரவம், அவர் கருத்தை யாரும் ஆட்சேபிக்க முடியாது' என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "கிரிக்கெட் விளையாட்டால், இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சச்சின். அவரை விமர்சிக்கும் தகுதி சிவசேனாவுக்கு இல்லை' என்றார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறும் போது, "இந்தியாவின் பெருமையை சச்சின் உயர்த்தி விட்டார்' என்று கூறியுள்ளார்.

அறிவுரையாம்: சச்சின் பற்றிய விமர்சனத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளதை அடுத்து, சிவசேனா இறங்கி வந்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கூறுகையில், "மும்பை பற்றி பேசியதற்காக சச்சினை, தாக்கரே விமர்சிக்கவில்லை. வயதில் மூத்தவர் என்ற முறையில் சச்சினுக்கு அறிவுரையாகத் தான், அவர் அதை கூறியுள்ளார்' என்றார்.

Source-Dianamalar

No comments:

Post a Comment