Friday, November 27, 2009

இந்தியாவுக்கு 100 வது டெஸ்ட் வெற்றி ; நம்பர் ஒன் இடத்தை பிடித்தது


கான்பூர் டெஸ்டில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா சுழலில் அசத்த, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
ஆமதாபாத்தில் நடந்த முதல் போட்டி "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் நடந்தது. இதில் சேவக், காம்பிர், டிராவிட் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி சதம் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 642 ரன்கள் குவித்தது. பின்னர் பவுலிங்கில் ஸ்ரீசாந்த்தின் "மிரட்டலான' வேகத்தில் அதிர்ந்துபோன இலங்கை அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில், இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து 356 ரன்கள் பின்தங்கியிருந்தது.
சமரவீரா ஆறுதல்: இன்று ( 24 ம் தேதி ) நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் மாத்யூஸ் (15) வெளியேறினார். பின் பிரசன்னா (29), ஹெராத் (13), முரளிதரன் (29) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவீரா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.
இன்னிங்ஸ் வெற்றி: ஒன்பதாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் மெண்டிஸ் (27), யுவராஜிடம் சிக்கினார். பின் வந்த வெலகேதராவை ஓஜா (4) சுழலில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து திரும்பினார். சமரவீரா (78) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்பஜன் 3, பிரக்யான் ஓஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இந்தியாவின் ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட்டார்.

"நம்பர்-1' இந்தியா: இலங்கைக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் முதன் முறையாக முதலிடத்துக்கு (122) முன்னேறி அசத்தியுள்ளது. அடுத்த இடத்தில் சிறிய வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவும் (122), மூன்றாவது இடத்தை இலங்கை (117) அணியும் பெற்றுள்ளது.
100வது வெற்றி : இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் கான்பூர் வெற்றி, 100 வது வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100வது வெற்றி பெற்றுள்ள அணிகள் வரிசையில் இந்திய அணி 6 வது இடத்தை பிடித்துள்ளது.

Source:Dinamalar

No comments:

Post a Comment